அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பெல்பாஸ்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 53 ஓட்டங்களையும் நஜிபுல்லா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் மார்க் அடாயர் மற்றும் ஹேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோர்ஸ் டொக்ரெல் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் ஹேண்ட் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் பாரூக்கி மற்றும் முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் நபி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 35 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.