முத்தரப்பு ரி-20 தொடரின் நியூஸிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 59 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சதாப் கான் மற்றும் நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, டிக்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் நவாஸ் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக பிரேஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.
முத்தரப்பு ரி-20 தொடரில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.