ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் குழு-பி, 12ஆவது தகுதிப் போட்டியில், சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்த சிம்பாப்வே அணி, குழு இரண்டில் இணைந்துள்ளது.
ஹோபர்ட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மன்சே 54 ஓட்டங்களையும் மெக்லியோட் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், சட்டாரா மற்றும் ங்கறவ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் முஸரபானி மற்றும் ராஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஸ் எர்வீன் 58 ஓட்டங்களையும் சிகாண்டர் ரஸா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், ஜோஷ் டேவி 2 விக்கெட்டுகளையும் பிரெட் வீல், மார்க் வட் மற்றும் மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 1 விக்கெட்டினையும் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட சிம்பாப்வே அணியின் சிகாண்டர் ரஸா தெரிவுசெய்யப்பட்டார்.