எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு ஆணையும் இன்றி தனிப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டிய சிறந்த தேர்தல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, தெரிவித்ததை அடுத்தே, ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் என நாம் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என அவர் நேற்றைய தினம் கொழும்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்னிறுத்தப்படுவார் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.