மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இததற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மார்பக, குடல் மற்றும் எலும்பு புற்றுநோயாளிகளுக்கான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் மோசமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கீமோதெரபி சிகிச்சையின் பின்னர் நோயாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்துள்ளார்.