நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களின் காணிக்குள் வசித்துவந்த நிலையிலேயே அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அண்மையில் மட்டக்களப்பு தாந்தாமலை பகுதியில் மீட்கப்பட்ட போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) முன்னாள் போராளியின் சகோதரி மற்றும் மருமகன் ஆகியோர் ஊடக சந்திப்புகளின் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “அண்மையில் நாடுக்காட்டிலிருந்து போராளியொருவர் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் சிலர் அதனை வைத்து தமது தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர் நடுக்காட்டில் மீட்கப்படவில்லை. தாந்தாமலை, ரெட்பானா எனப்படும் நடு ஊருக்குள் இருந்தே மீட்கப்பட்டார். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அதன் பின்னர் அதிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையிலீடுபட்டுவந்த நிலையில் 2007ஆம் ஆண்டு அவரது மனைவி அவரை பிரிந்துசென்றார்.
அதன் பின்னர் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் உள்ள எங்களது வீட்டுக்குவந்து சிறிதுகாலம் வசித்த பின்னர் தாந்தாமலையில் உள்ள தமது பரம்பரை வீட்டில் வசிக்கப்போவதாக அங்கு சென்று வசித்து வந்தார்.
அது எங்கள் பரம்பரை வீடாகும். அது காடு அல்ல. ஊருக்கு நடுவில் உள்ள எமது காணியாகும். அங்கு சென்று அவர் 15 வருடத்திற்கு மேல் வசித்து வருகின்றார்.“ எனவும் குறிப்பிட்டனர்.
அவர் சில வருடங்களாகவே இந்த நிலைமையில் உள்ளதாகவும் முன்னர் அவர் தமது காணியில் பயிர்செய்கைகள் முன்னெடுத்து தன்னை தானே பார்த்துவந்த நிலையில்,
கடந்த சில வருடங்களாக இவ்வாறு இருந்ததாகவும், எனினும் தான் மாதத்திற்கு இரண்டு தடைவ சென்று அவருக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கிவந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரை கடந்த காலத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தபோதும் அவர் இணங்காத நிலையிலேயே இருந்துவந்ததாகவும் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.