தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பாக விசேட கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு ஆரம்பம் முதலே தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அவசியம்.
நம் நாட்டின் தொழிலாளர் சட்டம் மிகவும் பழமையானது. இது திருத்தப்பட வேண்டும், சிறிய மாற்றங்களைச் செய்தாலும், நவீன உலகத்திற்கு ஏற்றவாறு தொழிலாளர் சட்டம் முழுமையாகத் திருத்தப்படவில்லை.
நாட்டின் பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் தனித்தனியான தொழிலாளர் சட்டங்கள் உள்ளன. இதை மாற்ற வேண்டும்.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் உடன்படிக்கையுடன் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆகவே தொழிலாளர் சட்டத்தை திருத்துவதற்கான விவாதங்களில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பது அவசியமாகும்” என்றார்.