இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி அலுவலகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் இந்த விஜயம் குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கடன் மறுசீரமைப்பு செயன்முறை உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரித்தானியா மற்றும் பிரான்சிற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு பல மாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து பரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், பெல்ட்-ரோட் முன்முயற்சியில் கலந்துகொள்வதற்காக ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி சீனாவுக்குச் செல்லவுள்ளார் மற்றும் இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை முதல் தடவையாக சந்திக்கவுள்ளார்.