”3 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ”என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3நாட்கள் அரச முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி 2ஆவது நாளான நேற்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 140 கோடி இந்தியர்களின் சார்பில் இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது மிகப்பெரிய கௌரவம் ஆகும்.
அதுவும் இந்த அவையில் 2ஆவது முறையாக உரையாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்திய-அமெரிக்க மரபணு மற்றும்இரத்தத்தில் ஜனநாயகம் சேர்ந்தே உள்ளது. இந்த ஜனநாயகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இட மில்லை. சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகைப் பாதுகாக்க பாடுபடுகிறோம். இது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஆகும்.
உலகிலேயே அதிக பெண் விஞ்ஞானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் இந்திய குடியரசு தலைவராக உள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது. அனைத்து வகையான தொழில் நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றனர்.
இந்தியா வளர்ந்தால் தான் உலகம் வளரும். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது.
அதேசமயம் இன்று இந்தியாவும், அமெரிக்காவும் விண்வெளியிலும், கடலிலும், அறிவியல், கலை மற்றும் ஸ்டாட்அப், வர்த்தகம், விவசாயம் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது”இவ்வாறு அவர் தெரிவித்தார்.