வவுனியா மற்றும் யாழில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா ஏ-9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அருகில் விபத்தொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனுடன் மோதுண்டதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ் ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம், வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்று அதிகாலை நேர்ந்த விபத்தில், 30 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி, விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.