நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராய்ந்து, நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த நியமனம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் ஆளும்- எதிர்த்தரப்பினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
நாடாளுமன்றம் இன்றுகாலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
இதன்போது விசேட அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணம் மற்றும் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளை நாடாளுமன்றில் அறிக்கையுடாக சமர்ப்பிக்கும் தெரிவுக்குழுவின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான, லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க எதிர்க்கட்சியினரே முதலில் யோசனையை முன்வைத்ததாகவும், இந்த நிலையில், ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரை இதற்கு தலைவராக நியமித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இது திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்கும் கதையைப் போன்றது என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே இந்த தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் இதற்கான பெயர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.