வரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபர் தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் இன்று அறிவித்தார்.
இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஓரிரு மாதங்களிலேயே வரிவிலக்கு வழங்கப்பட்டது. இதனால், 12 வீதமாக இருந்த தேசிய வருமானம் 8 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இவ்வாறு 600- 700 பில்லியனுக்கு இடைப்பட்ட வரிவிலக்கு வழங்கியமைக்கு யார் பொறுப்பு? கையை உயர்த்தி இதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் யார்?
ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கு நிதியுதவிகளை செய்த பெரும் முதலாளிகளுக்கு சார்பாகவே இந்த வரிவிலக்கு வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் எந்தவகையிலும் தொடர்பில்லை. இதன் விளைவாக, மக்கள் வீதிக்கு இறங்கி, 69 இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையும் பதவியிலிருந்து விரட்டியடித்தார்கள்.
இந்தநிலையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், வரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபரே தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பாக இங்கு பிரச்சினையில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.