தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களில் தபால் துறையில் இலாபமீட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த வருட இறுதிக்குள் 3000 மில்லியன் ரூபாயால் நஷ்த்தைக் குறைக்கவும், 2025 ஆம் ஆண்டளவில் இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் திணைக்களத்தை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டம், அதனை நவீனமயமாக்கும் செயற்பாட்டுக்கு இடையூறாக இருப்பதால், அதனை அவசரமாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் ஏற்கனவே 80 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.
தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் புதிய வருவாய் ஈட்டும் வழிகளை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது முத்திரை விற்பனை மூலம் மாத்திரம் வருடாந்தம் 4000 மில்லியன் ரூபாவும், முத்திரையிடல் மூலம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 668 மில்லியன் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
கடிதம் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் மூலம் 130 மில்லியன் ரூபாவையும், கேஷ் ஒன் டெலிவரி சேவை மூலம் 200 மில்லியன் ரூபாயையும் தபால் திணைக்களம் ஈட்டியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கேஷ் ஒன் டெலிவரி முறையை பிரபலப்படுத்தி வருமான அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டு, பரீட்சை ஆவணங்கள், காணிப்பத்திரங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் போன்றவற்றை தபால் மூலம் விநியோகிக்கும் இணைய செயல்முறைக்கு ஏற்ப தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.