மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், நாட்டில் ஆட்சி ஒன்றே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்த முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளது.
பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் இருக்கும் அவலநிலையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்கு செல்ல வேண்டும்.
அப்புதிய மக்கள் ஆணைக்குழு புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும்.
எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. மக்களின் கோரிக்கையான தேர்தல் உரிமை வழங்கப்பட வேண்டும்.
மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆணை எல்லாவற்றையும் விட முக்கியமானது. அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும்.
மக்கள் ஆணை எனும் மக்களினது நீதிமன்றத்திற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.