இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன், அதில் வேறு எவருக்கும் சந்தர்ப்பம் இருக்கும் என தாம் கருதவில்லை எனவும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் இலங்கை உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளினதும் மின்சாரக் கட்டமைப்புகளை கடலுக்கு அடியில் இணைப்பதற்கான மிகவும் சிக்கனமான மற்றும் சிறந்த வழியைத் தீர்மானிப்பது தொடர்பிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் மிலிந்த மொரகொட மேலும் தெரிவித்துள்ளார்.