யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கப் பகுதியில் நேற்று முன்தினம் காயங்களுக்குள்ளான நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது:-சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அண்மையில் 9 வயதான சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டிருந்தார் எனவும் இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த தகவலைத் தாயார், சிறுமியின் மாமாவுக்கு தெரிவித்த நிலையில் அவர் குறித்த நபரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த நபரை அவரது இல்லத்தில் அந்நபர் விட்டுவிட்டுச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த நபர் நேற்று முன்தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபரின் உடலில் காயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரிய கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும் குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமி இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.