”காணாமற்போன பத்துப்பேரினைக் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளபோதும் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை ”என ‘தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் ‘கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, வவுனியாவில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்ஆர்ப்பாட்டத்தினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அச்சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்” பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகின்றோம் சுமார் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் போருக்கு முன்னும், பின்னும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
எனவே சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே நாம் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையினை வெளிப்படுத்த முடியும்.
போரின் போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழு ஒன்று வன்னியில் உள்ள தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்தது. அந்த துணை இராணுவப் படைத் தலைவர் இப்போது எம்.பி.யாக இருப்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.
அதுமட்டுமல்லாது இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழ் குழந்தைகள் அருகில் உள்ள புத்த மடங்களில் பயிற்சி பெற்று இளம் பௌத்தபிக்குகளாய் ஆகியுள்ளனர். அவர்கள் சிங்களக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு இப்போது சிங்களவர்களாக வாழ்கிறார்கள்.
தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக எமது தமிழ்த் தலைவர்களும், மக்களும் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்த வேண்டும். இது நம் குழந்தைகளைத் தேடுவதற்கு உதவும்.
தமிழ் இனத்திற்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் பங்களிப்பை நாம் பாராட்டுகின்றோம்.அவர் சர்வதேச இராஜதந்திரிகளுடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உதவியை எமக்கு செய்யவேண்டும்.அங்கு தமிழர் இறையாண்மைக்கான எங்கள் விருப்பத்தை திறம்பட வெளிப்படுத்த முடியும்”இவ்வாறு தெரிவித்தனர்.