நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் இருக்கின்றது என்பதை இன்னுமொருமுறை இந்த தாக்குதல் சம்பவம் நிரூபணம் செய்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் தமிழர்கள் இணைந்து வாழ்வது எத்தனை தூரம் சாத்தியமானது என்பது பற்றி, இனிமேலாவது சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமநேரத்தில், தமிழர்களையும், அவர்களது போரியல் நியாயத்தையும், இனத்துக்காக நிகழ்த்தப்பட்ட தியாகத்தையும் காலில் போட்டு மிதித்து, தங்களது அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ளமை கண்டனத்துக்குரியது என்றும் கூறியுள்ளார்.
ஈழத்தமிழர்களது தன்னாட்சிக் கோரிக்கை நியாயபூர்வமானது என்ற செய்தியை சர்வதேச சமூகத்தின் செவிகளில் அறைகூவல் செய்வதற்கு இந்தச் சம்பவம் ஓர் சாட்சியமாய் அமைந்திருக்கிறது என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.