அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
அதற்கிணங்க, அரசியலமைப்பு பேரவையின் தாமதங்கள் குறித்து ஆராய ஒரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி நேற்றைய சபை அமர்வின்போது அழைப்பு விடுத்திருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சபாநாயகர், அரசியலமைப்பு பேரவைத் தலைவர் என்ற முறையில், அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இதனைத் தொடர்ந்து அவரது கருத்து குறித்த அரசியலமைப்பு பேரவையின் நிலைப்பாட்டை விளக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் அங்கீகாரம் தொடர்பான விடயங்கள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் இன்று உறுதியளித்தார்.