இலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது
நாட்டின் பெரும்பான்மையான மக்கள், துன்பங்களைச் சகித்துக்கொண்டு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்ததால் எம்மால் மெதுவாக முன்னேற முடிந்தது.
இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லும் போது, சிரமங்கள் யாவும் மறைந்துவிடும், வாழ்க்கைச் சுமை குறையும், பொருளாதாரம் வலுவடையும். இலங்கை தாய்க்கு மீண்டும் விடிவு கிட்டும்.
மேலும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பெருமைமிக்க பணிக்கு இலங்கையிலும் நாட்டுக்கு வெளியிலும் வாழும் அனைத்து இலங்கையர்களும் தங்களால் முடிந்தளவு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.