ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
கண்டி- பல்லேகலே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 48.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹமட் ஷா 65 ஓட்டங்களையும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டுகளையும் துனித் வெல்லாலகே, அசித்த பெனார்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 35.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 118 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், கைஸ் அஹமட் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் நபி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அவிஷ்க பெனார்டோவும் தொடரின் நாயகனாக பெத்தும் நிஸங்கவும் தெரிவுசெய்யப்பட்டனர்.