”ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது” என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது ”இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். முதலில், இந்த உதவித்தொகை பெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த புலமைப்பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 04 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
கடந்த 3 வருடங்கள் நம் அனைவருக்கும் கடினமான காலமாக அமைந்தது. நாங்கள் அனைவரும் அவதிப்பட்டோம். உணவு இருக்கவில்லை. மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இருக்கவில்லை.
இப்போது அந்த நிலைமை இல்லை. ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டின் பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்காதிருக்க தீர்மானித்தேன். அதன்படி இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மீட்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க தேவையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.