2015- 2019 காலப்பகுதியில் சமெட்ட செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீண்டும் அமுலாக்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் சமெட்ட செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானங் கொண்ட சமூகங்களை இலக்கு வைத்து மாதிரிக் கிராம வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடன் வேலைத்திட்டம், கிராமசக்தி கடன் உதவித்திட்டம், கடன் உதவித்திட்டம், விருசுமிதுறு, சிறுநீரக நோயாளர்களுக்கான வீடமைப்பு உதவித்திட்டம் மற்றும் வெள்ள அனர்த்த வேலைத்திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் இதன் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
எனினும், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ள 387,520 வீட்டு அலகுகளில் 229,580 வீட்டு அலகுகளின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டன.
அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்வேறு உதவித்திட்டங்கள் மூலமும் மற்றும் பயனாளிகளாலும் குறித்த வீட்டு அலகுகளில் ஒருபகுதி நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, இதுவரை வீட்டுக் கட்டுமானங்களைப் பூர்த்தி செய்யாத 45,117 வீட்டு அலகுகளின் கட்டுமானப் பணிகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலையீட்டில் முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாகப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.