நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெர்ரி போன்லீ நேற்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பானது அலரிமாளிகையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் குறிப்பிட்ட பிரதமர், நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கொழும்பு திட்டத்தின் கீழ் ஆதரவை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தார்.
அத்துடன் 1958 ஆம் ஆண்டு கொழும்பு திட்ட மானியத்தின் கீழ் மஹரகமவில் இலங்கை பல் மருத்துவக் கல்லூரியை நிறுவியமைக்காக நியூசிலாந்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அதனை மேலும் மேம்படுத்துவதற்கு உதவி கோரினார்.
இதேவேளை இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியை பாராட்டிய நியூசிலாந்தின் சபாநாயகர், இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதி செய்தார்.