நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” கட்சிகளை உடைப்பதற்காக நாம் இன்று ஒன்று கூடவில்லை. கட்சிகள் ஒன்றுகூடி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வந்துள்ளோம்.
எம்மை ஆசீர்வதிக்கவே மழையும் பெய்தது. அதனால் கட்சி பேதமின்றி சுயாதீனமாக சிலிண்டர் சின்னத்தில் போட்டிடுகிறேன். மற்றைய தலைவர்கள் ஓடிப்போன வேளையில்,
முடியும் என்று நாட்டை மீட்க வந்தவர்கள் எம்மோடு உள்ளனர்.
அதனால் எனது அணியில் அனைவரும் ஒன்றுபட்டு முன்னோக்கிச் சென்று எதிர்காலத்தைப் பாதுகாப்போம். என்னுடையதோ பிரதமருடையதோ எதிர்காலம் இங்கு பாதுகாக்கப்படாது.
கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது.
அன்று நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை, இருளில் இருந்தோம். எரிபொருள் இருக்கவில்லை, நடந்து சென்றோம். கேஸ் இருக்கவில்லை, சிலிண்டர் மட்டுமே இருந்தது, அதையும் விற்றோம்.
மருந்து இருக்கவில்லை, மக்கள் வீதிகளில் உயிரிழந்தனர். ஹோட்டல்கள் மூடப்பட்டன,
தொழிற்சாலைகள் முடங்கின. அப்போது நானும் பிரதமரும் மட்டுமே நாட்டை ஏற்க முன்வந்தோம்.
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினர். எதிர்கட்சித் தலைவர் ஓடிவிட்டார்.
அனுர குமார திசாநாயக்கவை காணவே முடியவில்லை. இந்த காலப்பகுதியில் மக்கள் கடுமையாகத் துன்பப்பட்டனர்.
அப்போது சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்? மக்களின் கஷ்டம் புரிந்திருந்தால் அன்று ஆட்சியை ஏற்றிருக்க வேண்டும். எதிர்கட்சி எந்த வேளையிலும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாம் எதிர்கட்சி ஏற்க வேண்டும். அவர்கள் எங்கு இருந்தனர்?” இவ்வாறு ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.