கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளின், தரம் 5 இல் கல்வி கற்றும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கும் பயிற்சியும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் அனுசரணையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது கிளிநொச்சி, முழங்காவில் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
அந்தவகையில், குமுழமுனை தமிழ் கலவன் மகா வித்தியாலயம், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம், முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம், நாச்சிக்குடா தமிழ் கலவன் வித்தியாலயம், கரியாலை நாகபடுவான் இலக்கம் 2 பாடசாலை ஆகிய 5 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இதில் கலந்து கொண்டிருந்தனர்.
சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்கு ஆலோசனைகளும், பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய ரீதியாக வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.