“ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயானது கொரோனா போன்ற தொற்று அல்ல என்றும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும்” உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட குரங்கம்மை நோயானது, தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பாவுக்கான இயக்குநர் ஹன்ஸ் க்ளுஜ் (Hans Kluge) குரங்கு அம்மை நோயானது புதிய கொரோனா தொற்று அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் ஒவ்வொரு மாதமும் குரங்கு அம்மை நோயின் கிளேட் 2 வகைமையினால், குறைந்தது 100 பாதிப்புகள் பதிவாவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என்றும் நெருக்கமான உடல் தொடர்பு மூலம் மனிதர்களிடையேயும் இது பரவக்கூடியது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.