யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடியமையினால் நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உள்ள வீட்டுக்கு நேற்று இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று, சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பலால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண் ஒருவரும், 5 வயதான சிறுவன் ஒருவரும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தினால் அங்கிருந்து மோட்டார் சைக்கிள், வீட்டு மதில் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், இந்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், அயலவர்கள் இணைந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று இரவு ஒன்றுக் கூடியமையால், அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.
வன்முறைக் கும்பலின் அட்டகாசங்களால் தங்களால் நிம்மதியாக உறங்கக்கூட முடியாதுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.