நாட்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரணில் விக்ரமசிங்கவிடம் தற்போது
நல்லதொரு குழுவினர் இருக்கின்றனர். பிரசன்ன ரணதுங்க, லொஹான் ரத்வத்தே, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் அவருடன் இருக்கின்றனர். கொள்ளையிடுவதற்கு நல்லதொரு குழுவினர்.
இவர்களினால் நாடு சோமாலியாவாக மாறிவிடும். இவர்கள் அனைவரும் எமது நாட்டில் காணப்பட்ட அனைத்து உற்பத்தி துறைகளையும் வீழ்ச்சியடையச் செய்தனர். உற்பத்தி துறையை மேம்படுத்தாது அனைத்து துறைகளையும் இல்லாதொழித்தனர்.
வெங்காயம், பயறு, கௌப்பி, குரக்கன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தனர். இவர்கள் ஒருபோதும் நாட்டை மேம்படுத்துவதற்கு எண்ணவில்லை. நாடு மேம்படுமானால் இவர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும்” இவ்வாறு அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.