எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் இன்று நள்ளிரவுக்கு பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது அல்லது ஊக்குவிப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாகவும், குறித்த காலப்பகுதியில், எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.