ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் வெற்றியுடன் மக்களுக்கான புதிய அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும் எனவும், ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்கவின் டீல் அரசியலை, நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடவத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற வெற்றிப்பேரணியில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாக பல எதிர்ப்பார்ப்புக்களுடன் காத்திருக்கின்றனர்.
எமது ஆட்சியில் நாம் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றும் இலவச கல்வி, இலவச சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.
அரசதுறையினருக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்போம் தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளத்தினை 25 ஆயிரம் ரூபாவாக நடைமுறைப்படுத்துவோம்.அதனை நாம் எமது கொள்கை திட்டத்திலும் இணைத்துள்ளோம்.
ரணசிங்க பிரேமாச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டகைத்தொழில் அபிவிருத்தி யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.
கம்முதாவ இலவச வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.நாட்டின் பொருளாதார கொள்ளையர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள்.மக்களிடம் கொள்ளையடித்த பணத்தினையும் மீட்டுக்கொடுப்போம்.
இன்று பலர் அரச சொத்துக்களையும் மக்களின் பணங்களையும் கொள்ளையடித்த பொருளாதார கொள்ளையர்கள் தப்பித்து செல்வதற்கு இனியும் இடமளிக்க மாட்டோம்.
ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்க டீல் அரசியலை இன்று முழு நாட்டு மக்களும் அறிவார்கள். 220 லட்சம் மக்களை இருவரும் ஏமாற்றி வருகின்றனர்.
மக்கள் போலிப் பிரசாரங்களுக்கு இனியும் ஏமாறக்கூடாது. 21 ஆம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் வெற்றியுடன் மக்களுக்கான புதிய அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும்.
எமது ஆட்சியில் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் 24 மாதத் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படும்.
உற்பத்தி முதலீடு, சேமிப்பு, ஏற்றுமதி போன்றவற்றை இதனூடாக மேற்கொள்ளமுடியும்“ இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.