சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹலவத்த தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 6 மணியளவில் ஹலவத்தை சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக ஹலவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், ஹலவத்தை போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் அந்த வீட்டில் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையறையின் படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண் ஹலவத்தை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார்.
அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.