மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் பகுதிகளில் அனுர அலை தணியத் தொடங்கி விட்டதா? அண்மை வாரங்களில் இடம்பெற்று வரும் சில விடயங்கள் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் மத்தியில் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன.
முதலாவதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள்.
இரண்டாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நிலைப்பாடு.
மூன்றாவது,முட்டை விலை ஏறி இறங்குவது;தேங்காய் விலை அதிகரித்திருப்பது.
நாலாவது,தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேவிபி வேட்பாளர்களுக்கு வெகுசனக் கவர்ச்சி குறைவு என்பது.
தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரை அனுர ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒரு மாற்றம்தான். அதில் சந்தேகம் இல்லை. அந்த மாற்றம் ஒரு வெற்றி அலையாக தமிழ் பகுதிகளுக்கும் பரவியது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள படித்தவர்கள்,விவரம் தெரிந்தவர்கள் மத்தியில் ஜேவிபி குறித்த ஓர் எதிர்பார்ப்பும் காணப்பட்டது.குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பு, அக்கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படாமை, அக்கட்சிகள் உதிரிகளாக நின்று வாக்கு கேட்பது, சுயேச்சைகளின் அதிகரிப்பு… போன்ற பல விடயங்கள் காரணமாகத் தமிழ் தேசிய கட்சிகளின் மீது மக்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வரும் ஒரு பின்னணியில், ஒரு பகுதி படித்தவர்கள், அரசியலை அறிவுபூர்வமாக அணுகுபவர்கள், ஜேவிபியை ஒரு மாற்றாக பார்க்க தொடங்கிய ஒரு நிலைமை சில வாரங்களுக்கு முன்பு வரை காணப்பட்டது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்குள் அந்த எதிர்பார்ப்புக குறையத் தொடங்கி விட்டது.
குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் ஜேவிபியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் பெருமளவுக்கு மக்கள் அபிமானத்தை வென்றெடுத்தவர்கள் அல்ல. அவர்கள் பொதுவெளியில் ஆற்றும் உரைகளும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தருபவைகளாக காணப்படுகின்றன. திருகோணமலையில் ஜேவிபி நிறுத்தியிருக்கும் ஒரு வேட்பாளர் ஒப்பீட்டளவில் மூன்று இனங்களின் மத்தியிலும் தன் கவர்ச்சியை ஓரளவுக்குக் கட்டி எழுப்பி வைத்துள்ளார்.ஆனால் ஏனைய தமிழ்ப் பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்று தெரிகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக, வடக்கில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிபோல காட்சி தருவது தொடர்பிலும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.அரச வைபவங்களில் அவர் அதிகம் துருத்திக்கொண்டு தெரிகிறார்.அதுவும் அனுர கொண்டுவந்த மாற்றம் எது என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது.
மேலும் அனுர ஆட்சிக்கு வந்ததும் முட்டை விலை குறைந்தது.ஆனால் அது தற்காலிகமானது என்பதைத்தான் சந்தை நிலவரங்கள் பின்னர் வெளிப்படுத்தின. அப்படித்தான் தேங்காயின் விலையும். மாரி காலங்களில் தேங்காய் உற்பத்தி குறைவதனால் தேங்காய் ஏற்றுமதியைத் தடுக்கும் அரச தீர்மானம் ஒன்று அமுலில் உள்ளது. ஆனால் அதை மீறி தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகிறார்கள். முட்டையைப் போலவே தேங்காயும் எல்லா வீடுகளின் சமையலறைகளிலும் அத்தியாவசியமான ஒரு பொருள். அதன் விலை அதிகரிப்பானது ஜேவிபி கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றம் தொடர்பான ஏமாற்றங்களை அதிகப்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியாது என்பது அரசியலை ஓர் அறிவியலாக பயில்பவர்களுக்கு விளங்கும்.ஆனால் சாதாரண வாக்காளர்களுக்கு அது விளங்காது. தேங்காயும் முட்டையும் அனுர மீதான எதிர்பார்ப்பைக் குறைக்க கூடும்.
அடுத்தது, பிரதான விடயங்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள், ஜேவிபியிடம் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை நிரூபித்தன. எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறி வரும் விடயம் அதுதான். அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே அவரை நோக்கி அது தொடர்பான கேள்விகளை நான் பகிரங்கமாக எனது கட்டுரைகளில் எழுப்பியிருந்தேன்.
அக்கேள்விகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் என்னை விமர்சித்து பதில் எழுதியிருந்தார். அவர் இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவராக தன்னை காட்டிக் கொள்ளும் ஒருவர். அவர் எனக்கு எழுதிய பதில்களை இப்பொழுது காலம் தோற்கடித்து விட்டது.
இனப்பிரச்சினையை ஜேவிபி ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகத்தான் விளங்கி வைத்திருக்கிறது. அதை இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்புக் கூடாக விளங்கி வைத்திருக்கவில்லை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக் கொள்ளாமைதான் இனப்பெருச்சினைக்கு மூல காரணம். இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்,தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்காத வரையிலும் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால் இந்த விடயத்தில் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் ஜேவிபியிடம் அடிப்படை விளக்கம் இல்லை என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தன.
அடுத்தது பயங்கரவாத தடைச் சட்டம்.அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் ஒரு தரப்பாக இருக்கும் பொழுது ஜேவிபி பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் போன்றவர்களோடு சேர்ந்து போராடியது. ஆனால் இப்பொழுது அது அதன் வார்த்தைகளிலிருந்து வழுக்கத் தொடங்கிவிட்டது என்று சுமந்திரன் குற்றம் சாட்டுகிறார்.அது உண்மை.இனப் பிரச்சினை தொடர்பாக சரியான விளக்கம் இல்லை என்றால், அதோடு தொடர்புடைய ஏனைய விடயங்களிலும் அப்படித்தான் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
சிங்கள பௌத்த பெருந்தேசிய வாத நோக்கு நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பயங்கரவாதமாகத்தான் தெரியும்.
ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வந்து தமிழ்ப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று விழித்தார். ஆனால் ஜேவிபினர் அவர்களுடைய இரண்டாவது போராட்டத்தை தொடங்கியபொழுது அவர் அவர்களை பயங்கரவாதிகள் என்று விழிக்கவில்லை. நாசகார சக்திகள் என்றுதான் விழித்தார். வார்த்தைத் தெரிவில்கூட ஜெயவர்த்தனவிடம் இனவாதம் இருந்தது. ஆயுதமேந்திய தமிழ் மக்களை அவர் பயங்கரவாதிகள் என்று அழைத்தார். ஆனால் சிங்கள மக்களை நாசகார சக்திகள் என்று அழைத்தார்.
ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் இயக்கங்களைப் போலவே ஜேவிபியும் மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு ஆறுகளில் வீசப்பட்டார்கள். இன்னொரு பகுதியினர் குற்றுயிராக டயர்களோடு போட்டுக் கொளுத்தப்பட்டார்கள். அபகீர்த்தி மிக்க ஒரு போலீஸ் உயரதிகாரி- அவர் சித்திரவதைகளுக்குப் பேர்போனவர்.தன்னிடம் அகப்பட்ட ஜேவிபிக் காரர்களை எப்படிச் சித்திரவதை செய்வார் என்பது தொடர்பாக ஒரு கதை அப்பொழுது வெளிவந்தது. இரண்டு குமிழ்முனைப் பேனாக்களை அவர் கைதிகளின் இரண்டு காதுகளுக்குள்ளும் செருகுவார்.கைதி உண்மையைக் கூறாவிட்டால் அவர் தன் இரண்டு கைகளாலும் அந்த இரண்டு குமிழ் முனை பேனாக்களையும் பலமாக அறைவார். குமிழ்முனைப் பேனா காதைக் கிழித்துக்கொண்டு கபாலத்தைத் துளைக்கும். இப்படிப்பட்ட கொடுமையான அனுபவங்களுடாக வந்த ஒரு இயக்கம், இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்தை நியாயப்படுத்துகின்றதா?
அது மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திலும் ஜேவிபி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில்,கலாநிதி
விஜய ஜெயலத் உரையாற்றும் பொழுது இலங்கைத் தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறந்துவிடும் ஒரு குரூரமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது என்ற பொருள்பட உரையாற்றினார்.அவர் அவ்வாறு கூறியது, கடத்தப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஜிவிபி உறுப்பினர்களின் அல்லது ஆதரவாளர்களின் கதையைத்தான். ஆயிரக்கணக்கான ஜேவிபியினர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதொடர்பான சரியான புள்ளி விபரம் கூடக் கையில் இல்லை. ஆனால் அதுதொடர்பாக ஜேவிபி எப்பொழுதாவது திறந்த, நீதியான விசாரணையைக் கோ? இல்லை. ஏன்? ஏனென்றால், அவ்வாறு விசாரணைகள் நடந்தால் படைத்தரப்பே குற்றம் சாட்டப்படும். யுத்த வெற்றிக்கு பின் எந்தப் படைத்தரப்பை ஜேவிபி தலையில் வைத்துக் கொண்டாடியதோ, இப்பொழுது அனுரவுக்கு எந்த படைதரப்பு அதிகம் வாக்களித்ததோ, அதே படைத்தரப்பை விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டியிருக்கும். ஜேவிபி அதை விரும்பவில்லை. அதாவது அங்கேயும் இனத்தின் வெற்றியை தான் ஜேவிபி பாதுகாக்க முற்பட்டது. தனது சொந்த தோழர்களுக்கான நீதியை அல்ல.
மேலும் கடந்த வாரம், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த சமூகச் செயற்பாட்டாளர் ஆகிய செல்வினை பனம்பொருள் அபிவிருத்தி சபை பணிப்பாளர் பதவிக்கு நியமித்த ஜேவிபி அமைச்சர்,சில நாட்களில் அந்த முடிவை மாற்றி அப்பதவிக்கு வேறொருவரை நியமித்திருக்கிறார்.என்ன காரணத்துக்காக செல்வின் நீக்கப்பட்டார்? செல்வினுக்கு அப்பதவி வழங்கப்பட்ட பொழுது அதை ஒரு பெரிய மாற்றமாகக் காட்டி சில தமிழ் இடதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். அரசியல் நோக்கு நிலை வேறுபாடுகளுக்கும் அப்பால் ஜேவிபி ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது என்ற பொருள்படவும் எழுதினார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைதான் செல்வின் விவகாரம் தமிழ் மக்களுக்கு உணர்த்தியது.
நிறைவேற்று அதிகாரம் கிடைத்ததும் ஜேவிபி அதே சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் கைதியாக மாறிவிட்டதா? அனுர அலை அதன் மினுக்கத்தை இழந்து வருகிறதா?
அனுர,ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு நான் அவரிடம் பகிரங்கமாக சில கேள்விகளைக் கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கேள்விகளுக்கு பதில் கூற முற்பட்ட தமிழ் ஜேவிபியர்கள் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின் இனவாதம் பின்வாங்கி விட்டது என்பதுதான். அது ஆனால் அது பின்வாங்கவில்லை.அது தற்காலிகமாக தன்னை தற்காத்துக் கொண்டது; அல்லது பதுங்கிக் கொண்டது அல்லது உரு மறைப்புச் செய்துகொண்டது என்பதுதான் சரியா? கடந்த சில வார கால அனுர ஆட்சி தமிழ் மக்களுக்கு உணர்த்துவது அதைத்தானா?