உக்ரேன் – மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சனிக்கிழமை (15) தெரிவித்தனர்.
அதன்படி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு எதிர்வரும் நாட்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் மெக்கால் ரொய்ட்டர்ஸ் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
எனினும், அவர்கள் ரஷ்யாவிலிருந்து யாரை சந்திப்பார்கள் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறெனினும், கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் அழைக்கப்படவில்லை என்றும், மூலோபாய பங்காளிகளுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்பு ரஷ்யாவுடன் கிய்வ் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் கூறினார்.
கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக பலமுறை சபதம் செய்தார்.
அவர் புட்ன் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு புதன்கிழமை தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடினார்.
இதனிடையே தற்சமயம் ரஷ்யா உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் பல மாதங்களாக கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகிறது.
அதே நேரத்தில் உக்ரேனின் சிறிய இராணுவம் மனிதவள பற்றாக்குறையுடன் போராடுகிறது, மேலும் மேற்கு ரஷ்யாவில் ஒரு பகுதியை வைத்திருக்க முயற்சிக்கிறது.
இந்த நிலையில், எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தின் கீழும் உக்ரேனின் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவும் நிரந்தரமாக நடுநிலை வகிக்கவும் ரஷ்யா கோரியுள்ளது.
கைப்பற்றப்பட்ட நிலத்தில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று உக்ரேன் கோருகிறது, மேலும் மாஸ்கோவின் தாக்குதலைத் தடுக்க நேட்டோ உறுப்பினர் அல்லது அதற்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது.
போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுக்கு பல பில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கியுள்ளன.