ஒரு வருடத்திற்கு முன்னர் இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் பிரபல மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து 25 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த குழுவொன்றை குருவிட்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 2023 நவம்பர் 22 ஆம் திகதி அதிகாலை மாணிக்கக்கல் வியாபாரியின் வீட்டுக்கு வேனில் வந்த சந்தேகநபர்கள், மாணிக்கக்கல்லை விற்பது போல் பாவனை செய்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் அச்சுறுத்தி இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எஹெலியகொட, குருவிட்ட மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (15) இரத்தினபுரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களில் இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றைய சந்தேகநபர் கொலைகளுடன் தொடர்புடையவர் என்பதால் நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பகுதிகளில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.