வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும், அவரது மனைவியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (16) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு முயற்சிகள், துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
சந்தேகநபர் வெளிநாட்டில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
புஷ்பராஜ் விக்னேஸ்வரம் என்ற 30 வயதுடைய நபரும் அவரது 25 வயது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.