போப் பிரான்சிஸ் அவர்களின் நுரையீரல் இரண்டிலும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை (18) பிற்பகல் மருத்துவமனையில் புதனித பாப்பரசருக்கு மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், அவரின் நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அவருக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை அவசியமாகியுள்ளது.
இருந்த போதிலும், போப்பாண்டவர் “நல்ல மனநிலையில்” இருந்ததாகவும், “வாசித்தல், ஓய்வெடுத்தல் மற்றும் பிரார்த்தனை செய்வதில்” அவர் நாளைக் கழித்ததாகவும் வத்திக்கான் கூறியது.
மேலும், பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் நலம் விரும்பிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்து, “அவருக்காக ஜெபிக்கும்படி” கேட்டுக் கொண்டாகவும் வத்திக்கான் குறிப்பிட்டது.
கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன், போப் பல நாட்களுக்கு மூச்சுக்குழாய் ஒவ்வாமை அறிகுறிகளைக் கொண்டிருந்தார்.
அவர், 2025 கத்தோலிக்க புனித ஆண்டிற்கான வார இறுதியில் பல நிகழ்வுகளை வழிநடத்தவிருந்தார், இது அடுத்த ஜனவரி வரை திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், போப்பின் நாட்காட்டியில் உள்ள அனைத்து பொது நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் 12 ஆண்டுகளில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 21 வயதில் அவரது நுரையீரல்களில் ஒரு பகுதி அகற்றல் உட்பட வாழ்நாள் முழுவதும் பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2023 மார்ச்சில் அவர் மூச்சுக்குழாய் ஒவ்வாமையுடன் மருத்துவமனையில் மூன்று இரவுகளைக் கழித்தார்.
அதே ஆண்டு ஜூன் மாதம் வயிற்று குடலிறக்கத்தை சரிசெய்ய மூன்று மணிநேர அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
மற்றொரு நோயின் காரணமாக, 2023 இல் COP28 காலநிலை உச்சிமாநாட்டிற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான தனது பயணத்தை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், அவர் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் 21 புதிய கத்தோலிக்க கர்தினால்களை நிறுவும் விழாவிற்கு தலைமை தாங்கியபோது, அவரது கன்னத்தில் ஒரு பெரிய காயத்துடன் தோன்றினார்.
மிக அண்மைய சம்பவமாக ஜனவரியில் அவர் கீழே விழுந்து வலது கையில் காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.