திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு செய்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில வரவுசெலவுத் திட்டத்துக்கான ஒரு முன்னோட்டத்தை ஸ்டாலின் எக்ஸில் பகிர்ந்து கொண்டார்.
அதில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…” என்று கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) எதிரான எதிர்ப்பை ஒரு மாநிலம் புதிய நிலைக்கு எடுத்துச் சென்று, தேசிய நாணய சின்னத்தை நிராகரிப்பது இதுவே முதல் முறை.
இந்தி திணிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், மாநில வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து ₹ சின்னத்தை நீக்கும் முடிவு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய அம்சங்களை, குறிப்பாக மும்மொழி சூத்திரத்தை செயல்படுத்த தமிழகம் மறுத்ததன் விளைவாக, சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் மத்திய கல்வி உதவியில் 573 கோடி இந்திய ரூபாவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கொள்கை விதிகளின்படி, மாநிலங்கள் SSA நிதியைப் பெற NEP வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
இதில் 60 சதவீதம் மத்திய அரசால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசாங்கம், NEP மூலம், பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசு தமிழ் பேசும் மக்கள் மீது இந்தி மொழியைக் கற்க கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று வாதிடுகிறது.
இந்தக் கூற்றுக்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிராகரித்து, ஆளும் கட்சியின் செல்வத்தை “புத்துயிர் பெற” ஆளும் திமுக அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 5, 2009 அன்று இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வடிவமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, 2010 ஜூலை 15, அன்று இந்திய ரூபாய் சின்னம் (₹) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டி உதய குமார் உருவாக்கிய இந்த வடிவமைப்பின் மேலே உள்ள இணையான கோடுகள் இந்திய மூவர்ணக் கொடியைக் குறிப்பதாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நாட்டின் விருப்பத்தைக் குறிக்கும் சமத்துவ அடையாளத்தையும் சித்தரிப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய சின்னம் பின்னர் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களில் இணைக்கப்பட்டது, ₹ சின்னம் கொண்ட முதல் நாணயங்கள் ஜூலை 8, 2011 அன்று புழக்கத்தில் வந்தன.