காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் இராணுவம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
இதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்தநிலையில், திடீரென ‘ஒபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13- ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.
ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது என இஸ்ரேல் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-
நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்தே, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஒரு வழி அல்லது வேறு வழியில் அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்ததை நீங்கள் நினைவில் கொள்கிறீர்கள்.அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிபர் டொனால் ட்ரம்ப்புக்கு வாழ்த்துகள்.
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வரலாற்றை மாற்றி அமைக்கப் போகிறது.
‘ஒபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் இஸ்ரேல் அற்புதமான செயல்களை செய்துள்ளது.
ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈடுசெய்ய முடியாதது.
உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது.
உலகின் மிக ஆபத்தான அரசாங்கத்தையும், ஆபத்தான ஆயுதங்களையும் தடுத்து நிறுத்த அமெரிக்க அதிபர் நடவடிக்கை எடுத்தார் என்பதை வரலாறு பதிவு செய்யும்.
தாக்குதல் நடவடிக்கை முடிந்த உடனேயே, ஜனாதிபதி டிரம்ப் என்னை அழைத்தார். இது மிகவும் அன்பான, மிகவும் நெகிழ்ச்சியான உரையாடலாக இருந்தது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தை அமைதி மற்றும் செழிப்பான எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்ல டிரம்ப்பின் நடவடிக்கை உதவி செய்யும்.
வலிமையின் மூலம் அமைதி ஏற்படும் என்பதே எங்கள் நம்பிக்கை. முதலில் வலிமை, பிறகு அமைதி.
அமெரிக்க அரசும், அதிபர் ட்ரம்ப்பும் மிகுந்த வலிமையுடன் செயல்பட்டுள்ளனர்.
அதிபர் ட்ரம்ப்புக்கு நானும், இஸ்ரேல் மக்களும் நன்றி சொல்கிறோம்.
அமெரிக்காவையும், இஸ்ரேலையும், நமது அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் கூட்டணியையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.”
என்று அவர் தெரிவித்துள்ளார்.