திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்து சிதைவடைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நீதிபதி இன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்ததுடன் சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இடத்தினை அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்று பார்வையிட்டிருந்தனர்.














