மக்காபி டெல் அவிவ் மற்றும் ஆஸ்டன் வில்லா இடையிலான போட்டியில் நடந்த போராட்டங்களின் போது பதினொரு பேர் கைது செய்யப்பட்டனர்.
யூரோபா லீக் போட்டியில் 700க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்ததுடன் அங்கு அமைதியின்மை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் இருந்துள்ளது.
இந்நிலையில் பர்மிங்காமில் ஆஸ்டன் வில்லா மற்றும் மக்காபி டெல் அவிவ் அணிகள் விளையாடியபோது நடந்த போராட்டங்களின் போது மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள் , இனவெறி துஷ்பிரயோகம் செய்தல், முகக்கவசத்தை அகற்ற மறுத்தல், கலைந்து செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் வெளியேறத் தவறியமை, இஸ்ரேல் சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துஷ்பிரயோகம் செய்தல், பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துஷ்பிரயோகம் செய்தல், ஒரு பொலிஸ் அதிகாரியை நோக்கி இனவெறி துஷ்பிரயோகம் செய்தல், போதைப்பொருட்களை வைத்திருந்தமை, வெடிகளை வீச முயற்சித்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவங்கள் தொடர்பில் 17 முதல் 67 வயதுக்குட்பட்ட ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக சர்ச்சைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயங்கள் ஆதிக்கம் செலுத்தியதால், போட்டிக்கு வெளிநாட்டு ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்டதுடன் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் பெருமளவில் ஏற்பட்டன.
இதேவேளை, பர்மிங்காம் நகர சபை தலைமையிலான உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு, மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் ஆதரவாளர்களின் வருகை குறித்த தடையை பரிந்துரைத்தது.
போட்டிக்கு முன்னதாக, பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சார உறுப்பினர்கள் உட்பட சுமார் 200 போராட்டக்காரர்கள் வில்லா பார்க்கின் அருகே கூடி, இஸ்ரேலை சர்வதேச கால்பந்தில் இருந்து விலக்க வேண்டும் என்று கோரியமையும் குறிப்பிடத்தக்கது.




















