நுவரெலியா, கிரகரி வாவியில் சிறிய ரக வானூர்தி ஒன்று நேற்று பிற்பகல் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த சிறிய ரக வானூர்தி நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தை மீட்க இன்று காலை முதல் மாலை வரையில் அதிகாரிகளும் ஊழியர்களும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.
குறித்த விமானத்தை மீட்பது கடினம் என்பதால், விமானத்தை மீட்க தொழில்முறை விமான இயக்குநர் (மாஸ்டர் டைவர்ஸ்) சேவைகளைப் பெறுவோம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை மீட்க போராடினர்.
நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் ஈரப்பதம் கூடிய மோசமான வானிலை காணப்பட்ட போதிலும் சிறிய ரக வானூர்தியை மீட்க பல்வேறு சந்தர்ப்பங்களில் முயன்றனர் இருந்தும் மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன விபத்தில் விமானமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
கிரகரி வாவியில் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகின்றன இதனால் அந்த பகுதியில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது விபத்திற்குள்ளானமை தொடர்பான விசாரணைக்கு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது .
இந்த விபத்தில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.


















