தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். அவர் ஒரு மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும் எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் அசாத்தியமான மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் அமைந்திருந்தது.’
‘தமிழக முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் உறுதியான நோக்கத்தைக் கொண்டிருந்தார். சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களை முன்னிறுத்தி, ஒரு சிறந்த ஆட்சியாளராக அவர் திகழ்ந்தார். கருணை மற்றும் உறுதி ஆகிய இரு பண்புகளையும் அவர் ஒருங்கே பெற்றிருந்தார்.’
‘அவருடனான எனது கடந்தகால கலந்துரையாடல்களை நான் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். இந்த மாத ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் ஜெயலலிதா குறித்து நான் பகிர்ந்த கருத்துக்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்.’ எனப் இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















