ஈரான் மோதலானது இந்தத் தலைமுறையையே தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமையும் என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின் இறுதி நாளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் “பலவீனமாக” இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரம் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்தப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்து, உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முன்னதாக ரஷ்ய-உக்ரைன் போரின் போது அன்றைய கன்சர்வேடிவ் அரசு அனைத்து குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கியது. ஆனால், தற்போதைய ஈரான் போர் சூழலில், தனது அரசு அனைவருக்கும் பொதுவான உதவியை வழங்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இலக்கு வைக்கப்பட்ட (Targeted support) உதவிகளையே வழங்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆலோசித்ததாகத் தெரிவித்த ஸ்டார்மர், இதற்காக 30-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட கூட்டணியை தாம் திரட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஹார்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற, தன்னிச்சையாக இயங்கும் ட்ரோன்களை (Autonomous drones) கடற்படைக் கப்பல்கள் மூலம் பயன்படுத்தப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, தனது மூன்று நாள் பயணத்தின் போது சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்துப் பிரதமர் ஸ்டார்மர் விரிவாகக் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.













