நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழந்து, இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும், மழை நிலைமையும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது **மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர்** வரை அதிகரிக்கக் கூடும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பிட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால அறிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய கடற்பகுதிகள் மிதமான அலையுடன் காணப்படும் என்றும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.












