சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை (19) இரவு பெய்ஜிங் சென்றடைந்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் மையத்தில் உள்ள மக்கள் மாபெரும் மண்டபத்திற்கு வெளியே வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வரவேற்பு விழா ஒன்றை நடத்தினார்.
ரஷ்ய ஜனாதிபதியின் இந்தப் பயணம் மே 19 முதல் 20 வரை இரண்டு நாட்கள் நீடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீன – ரஷ்ய உறவுகளின் நெருக்கத்தை எடுத்துக்காட்டும் வகையிலும், வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை உறுதிசெய்யும் நோக்கிலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஷி ஜின்பிங்கும் பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அச்சந்திப்பில், இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் மற்றும் தங்களின் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஒரு கூட்டு உயர்மட்ட அறிக்கை வெளியிடப்படும் என்றும், பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
மேலும், இரு தலைவர்களும் 2026–2027 ஆம் ஆண்டுக்கான ரஷ்யா-சீனா கல்வி ஆண்டுகளின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிலும் பங்கேற்பார்கள்.
ரஷ்ய ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில், சீன மக்கள் குடியரசின் அரச மன்றப் பிரதமர் லீ கியாங்குடனான ஒரு தனி சந்திப்பும் அடங்கும்; அச்சந்திப்பின்போது, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் சீனா பயணத்தை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு வந்துள்ளது.














