மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் வவுணதீவு பொலிஸ் குழுவொன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர் மதுபானம் அருந்திய பின்னர் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வந்தாகவும் இந்நிலையில் நேற்றைய தினம் சந்தேக நபரின் மனைவி கரடியானாறு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.
தடுப்புக்காவலில் மயக்க நிலையடைந்ததாகவும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவேளை மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இவரது தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.















