2026 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனன் மீது ஐஸ் பையை வீசியதற்காக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் 10 ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்த விரக்தியில் இருந்த டிம் டேவிட், நடுவர் நிதின் மேனனை நோக்கி ஐஸ் பையை வீசினார்.
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி (Article 2.9) இது லெவல் 1 குற்றமாக கருதப்பட்டு, அவருக்கு 50 சதவீதம் போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு 2 குறைமதிப்பு புள்ளிகள்(demerit points) வழங்கப்பட்டுள்ளன.
இந்த சீசனில் டிம் டேவிட் செய்த மூன்றாவது லெவல்-1 விதிமீறல் இதுவாகும்.
ஏற்கனவே லீக் கட்டத்தின் 20 ஆவது மற்றும் 54 ஆவது போட்டிகளில் அவர் குறைமதிப்பு புள்ளிகளை பெற்றிருந்தார்.
இறுதிப்போட்டியில் கிடைத்த 2 புள்ளிகளுடன் சேர்த்து அவரது மொத்த குறைமதிப்பு புள்ளிகள் 5 ஆக உயர்ந்தன.
ஐபிஎல் ஒழுங்கு விதிகளின்படி 5 குறைமதிப்பு புள்ளிகளை எட்டும் வீரருக்கு தானாகவே ஒரு போட்டி தடை விதிக்கப்படும்.
அதன்படி டிம் டேவிட் அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2026 ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் இருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த சீசனில் டிம் டேவிட் ஆர்சிபி அணிக்காகவோ அல்லது வேறு ஏதேனும் அணிக்காகவோ விளையாடினாலும், அந்த அணியின் முதல் போட்டியில் அவர் களமிறங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

















