ஈரான் – இஸ்ரேல் இடையே மீண்டும் போர் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் ஈரான் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரானின் எச்சரிக்கையை மீறி, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
அதன்பின்னர் , சில மணி நேரங்களிலேயே ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், தற்போது மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேலும், ஈரானில் உள்ள தங்களின் பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இஸ்ரேலின் ஹைபா பகுதியில் உள்ள பெட்ரோகெமிக்கல் ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்தப் போர் காரணமாக, ஈரான் தலைநகரில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தின் அனைத்து நாடுகளுக்கான விமானச் சேவைகளும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பவடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அண்டை நாடான சிரியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம், டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளை இரவு 11 மணி வரை நிறுத்தி வைத்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்பு, செங்கடலில் இஸ்ரேல் கப்பல்களுக்கு முழுமையான தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மேற்காசியாவில் மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தற்போது ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.















