பிரிட்டனின் வில்ட்ஷயர் (Wiltshire) பகுதியில் கடந்த ஜூன் 30 ஆம் திகதி அன்று நடந்த கார் விபத்து, தற்போது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 30ஆம் திகதி மாலை சுமார் 6:05 மணியளவில், ராயல் வாட்டன் பாசெட் (Royal Wootton Bassett) அருகே உள்ள சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வடதிசை நோக்கிச் சென்ற காரொன்றும் , தெற்கு நோக்கிச் சென்ற காரொன்றும் நேருக்கு நேர் மோதியத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், ஒரு காரை ஓட்டிச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் அதே காரில் பயணித்த பதின்ம வயது சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காரை ஓட்டிய 43 வயது மதிக்கத்தக்க நபர், விபத்தின் போது மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், பொலிசாரின் அடுத்தகட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த விபத்து திட்டமிட்ட செயலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தற்போது அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

















